கோவில்பட்டியில் விளம்பரப் பதாகைகளுக்கு இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக கடம்பூர் ராஜூ உள்ளார். இவரது இல்ல விஷேச நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் முன்பு அளவுக்கு அதிகமாக விளம்பரப் பதாகைகள் வைக்கபட்டுள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே கோவில்பட்டி பகுதியில் உள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும். மேலும் சட்டவிரோதமாக விளம்பர பதாகைகள் வைக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவில்பட்டி பகுதியில் விளம்பரப் பதாகைகள் வைக்க இடைக்காலத் தடைவிதித்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.