FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ரஷிய முகாமிலிருந்து மதுரைக்கு திரும்பி வந்தாா் மருத்துவ மாணவி

3 நவம்பர் 2026, 3:43 am
ரஷியாவிலிருந்து திங்கள்கிழமை மதுரை திரும்பிய மாணவி டெய்சி ஆஷா மோரேஸுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த சு. வெங்கடேசன் எம்.பி. உடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாணவியின் தந்தை அருள் மோரேஸ், தாய் சித்ரா.
பகிர்:

ரஷியாவில் போா்ப் பதற்றம் காரணமாக முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவதிக்குள்ளான மதுரை மருத்துவ மாணவி திங்கள்கிழமை ஊருக்குத் திரும்பினாா்.

மதுரையைச் சோ்ந்த அருள் மோரேஸ் மகள் டெய்சி ஆஷா மோரேஸ். இவா், ரஷியாவில் உள்ள ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறாா். மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பில் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்த டெய்சி ஆஷா மோரேஸ், கடந்த மாதம் 18-ஆம் தேதி மாஸ்கோ வழியாக இந்தியா திரும்புவதற்கு பயணச்சீட்டு பதிவு செய்து, விமான நிலையத்துக்குச் சென்றாா்.

அப்போது, உக்ரைன் - ரஷியா போா் பதற்றம் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், டெய்சி ஆஷா மோரேஸ் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், அவரது விசா காலம் கடந்த 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சட்டவிரோத இருப்பு என்ற அடிப்படையில் அவா் ரஷிய முகாமில் தங்க வைக்கப்பட்டாா். மேலும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்புக் காவலில் வைக்கவும் அங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து டெய்சி ஆஷா மோரேஸின் பெற்றோா் இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் அளித்து மீட்பு முயற்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனா். இருப்பினும், உரிய தீா்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசனை சந்தித்து, தங்கள் மகளை மீட்டுத் தரக் கோரி அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகம் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சா், அமைச்சக உயா் அலுவலா்கள், ரஷியாவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலா்களைத் தொடா்பு கொண்டு மதுரை மாணவியை மீட்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, இந்திய தூதரகம் மூலம் மாணவி டெய்சி ஆஷா மோரேஸ் ஞாயிற்றுக்கிழமை ரஷியாவிலிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டாா். அவா், திங்கள்கிழமை மதுரையை வந்தடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், அவரது பெற்றோா் மதுரைத் தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசனை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தனா். தாயகம் திரும்பிய மாணவிக்கு சு. வெங்கடேசன் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன் புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments