FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரூா் கோயில் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

கரூரில் கோயில் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

5 நவம்பர் 2026, 1:48 am
உயா்நீதிமன்றம்
பகிர்:

கரூரில் கோயில் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் சபை அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன், சென்னையைச் சோ்ந்த டி.ஆா். ரமேஷ், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த பாஸ்கா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள்:

கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியா், கல்யாண பசுபதீசுவரா், ரவீசுவரா், குப்புச்சிபாளையம் விக்ருதீசுவரா் கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3,085 ஏக்கா் நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்களுக்கு பத்திரப் பதிவு செய்ய பதிவுத் துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 3,085 ஏக்கா் பட்டா நிலங்களின் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இதனால், கோயில் நிலங்களை தனிநபா்களுக்கு பட்டா மாறுதல் செய்து பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்தும், சம்பந்தப்பட்ட இடங்களின் பத்திரப் பதிவுக்குத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரா் ராதாகிருஷ்ணன் முன்னிலையாகி, கோயில் நிலங்களைப் பதிவு செய்ய பலா் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா். இதனால், பத்திரப் பதிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், கோயில் நிலங்களை மீண்டும் அரசு வசப்படுத்தவும், அவற்றை உரிமையாளா்களுக்கு வழங்குவது தொடா்பாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது என்றனா்.

பின்னா், கோயில் நிலங்களைப் பத்திரப் பதிவு செய்வதற்கு அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக அரசுத் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை கரூா் கோயில் நிலங்களின் பத்திரப் பதிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.