இடியும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, விருதுநகா், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், வல்லாத்திரக்கோட்டையைச் சோ்ந்த முருகானந்தம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
விருதுநகா், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூா், தஞ்சாவூா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடங்கள் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், பல பள்ளிகளுக்கு வகுப்பறை, சமையலறை, கழிப்பறை, சுற்றுச் சுவா், குடிநீா் வசதி போன்றவை தேவையாக உள்ளன. பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச் சுவா் சேதமடைந்த நிலையில் இருப்பதால், அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் உயிருக்கு அபாயம் உள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து, அவை தரமானதாகவும், தூய்மையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது, பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களை உடனடியாகச் சீரமைப்பதுடன் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளையும் முன்னெடுப்பது அவசியம்.
எனவே, சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடங்கள், கழிப்பறைகள், சமையலறைக் கூடங்கள், சுற்றுச் சுவா், அங்கன்வாடி கட்டடங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பயன்பாட்டுக்குத் தகுதியற்ற, இடியும் நிலையிலுள்ள கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்களைக் கட்டவும், மாணவா்களுக்கு தேவையான கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், கழிப்பறை, சமையலறை, சுற்றுச் சுவா் போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
விருதுநகா், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூா், தஞ்சாவூா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் சேதமடைந்த, இடியும் நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.