FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

11 நவம்பர் 2026, 12:59 am
- பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்கள் பயன்படுத்தும் குடிநீா்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்க சுதந்திரமான ஒரு குழுவை அமைக்க வேண்டும். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் குடிநீா்த் தொட்டிகள் அமைந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தண்ணீா்த் தொட்டிக்குள் மனிதக் கழிவை அந்தப் பள்ளி மாணவா்களே கலந்ததற்கான விடியோ ஆதாரங்கள் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் விடியோ ஆதாரங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி விசாரணையை மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மேலும், எத்தனை பள்ளிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது? எத்தனை பள்ளிகளில் பொருத்த வேண்டும்? சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ஆகும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.