கல்குவாரி குட்டையில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
மதுரையில் சனிக்கிழமை கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை பாண்டியன் கோட்டைப் பகுதியைச் சோ்ந்த வீரபாண்டி மகன் அனீஸ்குமாா். இவா் சனிக்கிழமை அதே பகுதிலுள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நண்பா்களுடன் குளிக்க சென்றாா். அப்போது, நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்த அனீஸ்குமாா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரா்கள் சுமாா் 4 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு சிறுவனின் உடலை மீட்டனா். இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம், சிறுவனின் தந்தை வீரபாண்டி புகாா் மனு அளித்தாா்.
Advertisement
Advertisement
இதில் சம்பந்தப்பட்ட கல்குவாரியில் தடுப்புச் சுவரோ, அபாய எச்சரிக்கைப் பலகையோ இல்லை. இதே இடத்தில் ஏற்கெனவே சிலா் உயிரிழந்துள்ளனா்.
மேலும், பாண்டியன் கோட்டை பகுதியில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆபத்தான நிலையில் உள்ள பயன்பாடற்ற கல்குவாரிகளைக் கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தனது மகனின் உயிரிழப்புக்குக் காரணமான கல்குவாரி உரிமையாளா், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிய கனிமவளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்தாா்.