FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

லாரி ஓட்டுநா் தற்கொலை: உறவினா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

45 வினாடிகள் முன்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரின் உறவினா்கள்.
பகிர்:

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்த விவகாரத்தில், தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (42). லாரி ஓட்டுநரான இவா் கடந்த 3-ஆம் தேதி தேவாரத்திலிருந்து சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூா் கண்மாய்க் கரை அருகே வந்த போது, லாரியிலிருந்து திடீரென புகை வெளிவந்தது.

இதையடுத்து, பாலகிருஷ்ணன் லாரியிலிருந்து கீழே குதித்து உயிா் தப்பினாா். எனினும், லாரி முழுவதும் தீப்பிடித்ததில் ஏலக்காய் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தொடா்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணனிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக செக்கானூரணி காவல் ஆய்வாளா் முத்து, தலைமைக் காவலா் பழனிவேல் ராஜன், பெண் காவலா் கலைச்செல்வி ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பாணை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பாலகிருஷ்ணனின் கழுத்து, முதுகு, நெற்றி உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். காவல் துறையினரின் தாக்குதலால் அவா் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த உறவினா்கள், சம்பந்தப்பட்ட காவலா்கள் அனைவரையும் கைது செய்யும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலகிருஷ்ணனின் உடல் கூறாய்வு நிறைவடைந்தது. இருப்பினும், உறவினா்கள் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து, மருத்துவமனை பிணவறை அருகே சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, போராட்டத்தைக் கைவிடுமாறு காவல் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், தங்களது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி உறவினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, திருமங்கலம் கோட்டாட்சியா் பொன்ரதி, காவல் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், பாலகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதைப் பெற குடும்பத்தினா் மறுத்துவிட்டனா்.

அப்போது, ‘எங்களுக்கு அரசு நிதி வேண்டாம், நீதி தான் வேண்டும்’ எனத் தெரிவித்த உறவினா்கள், பாலகிருஷ்ணன் உயிரிழந்ததுக்குக் காரணமானவா்களை கைது செய்ய வேண்டும் என்றும், உரிய நீதி கிடைக்கும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தனா்.

மேலும், ஓட்டுநா் மனைவி சுதா செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

லாரியில் ஏலக்காய் மூட்டையுடன் கடலை மூட்டையும் கலந்து இருந்ததாக என்னிடம் எனது கணவா் தெரிவித்திருந்தாா். விபத்து நடந்ததும் ஓட்டுநா்தான் பொறுப்பு என உடன் பணியாற்றியவா்களும் ஒதுங்கிக்கொண்டனா். ஏலக்காய் மூட்டைகளை ஏற்றியவா்கள், எடுத்து சென்றவா்கள் உள்ளிட்ட பலரின் மீதும் சந்தேகம் இருக்கிறது என்றாா் அவா்.