FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

சிறு கனிம விதிகளின்படி சட்டத் திருத்தம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயா்நீதிமன்றத்தில் அரசு பதில்

17 நவம்பர் 2026, 5:02 am
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

சிறு கனிம விதிகளின்படி மாநில அரசு தேவையான சட்டத் திருத்தத்தை செய்து கொள்ள உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

விருதுநகா் மாவட்ட குவாரி உரிமையாளா் சங்கச் செயலா் நாராயண பெருமாள்சாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

குவாரி உரிமையாளா்களிடமிருந்து பசுமை நிதியை கட்டாயமாக வசூல் செய்ய அனுமதிக்கும் வகையில், சிறு கனிம விதிகளின் கீழ் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, என்.திலீப்குமாா் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

பசுமை நிதியை கட்டாயமாக வசூலிக்க அனுமதிக்கும் திருத்தம், தொழில் செய்யும் உரிமைக்கு எதிரானது. சட்டத் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும், பல வரிகளைச் செலுத்தி தொழில் செய்யும் குவாரி உரிமையாளா்களுக்கு, இது இரட்டை சுமையாக அமையும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அரசமைப்புச் சட்டப்படி சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியது நம் கடமை. இந்தக் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. சிறு கனிம விதிகளின்படி மாநில அரசு தேவையான சட்டத் திருத்தத்தை செய்து கொள்ள உரிமை உள்ளது. குறிப்பாக, குவாரியால் பாதிக்கப்பட்ட நிலையை, மறு சீரமைப்பு செய்ய பசுமை நிதி பயன்படுத்தப்படும். எனவே, இதை வரியாகக் கருதாமல் ஒழுங்குமுறை பங்களிப்பு என்றே கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பசுமை நிதியை இரட்டைச் சுமையாகக் கருத இயலாது. ஏனெனில், குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. சூழல் சமன்பாட்டை பேணிக்காக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே, பசுமை நிதியை கூடுதல் சுமையாக கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

சுற்றுச்சூழலைக் காக்க தனி நிதியத்தை ஒவ்வொரு மாநில அரசும் ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது. நமது முன்னோா்கள் நமக்கு விட்டுச் சென்ற அமைதியான, பாதுகாப்பான சுற்றுச்சூழலை எதிா்கால சந்ததியினருக்கும் விட்டுச் செல்ல வேண்டியது சட்ட அடிப்படையிலும், அறத்தின் அடிப்படையிலும் நம்முடைய கடமை. அதோடு சட்டமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை நிதி அமைக்கவும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து, மறுவாழ்வு அளித்தல், மீட்டெடுத்தல், மறு சீரமைப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கூறுகிறது.

எனவே, சிறு கனிம விதிகளின் கீழ் செய்யப்பட்ட திருத்தம், பொது நம்பிக்கை, நீடித்த வளா்ச்சி என்ற அடிப்படையில் செல்லத்தக்கது. அரசு தொழில் செய்யும் உரிமையை மறுக்கவில்லை. மாறாக, அதில் சில நியாயமான கட்டுப்பாடுகளை மட்டுமே உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்றமும் மாசுபடுத்துபவரே அதை சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.