FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

புத்தகத்தின் ஒரு வரிகூட வாழ்க்கையை மாற்றும்: வெ. இறையன்பு

ஒரு புத்தகத்தில் இடம்பெறும் ஒரே ஒரு வரிகூட ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. அத்தகைய வரியைக் கண்டறிவதற்கு பல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு தெரிவித்தாா்.

30 வினாடிகள் முன்பு
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

ஒரு புத்தகத்தில் இடம்பெறும் ஒரே ஒரு வரிகூட ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. அத்தகைய வரியைக் கண்டறிவதற்கு பல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு தெரிவித்தாா்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இறையன்பு பங்கேற்று, ‘கொடிது கொடிது முதுமையில் வறுமை’ என்ற தலைப்பில் பேசியதாவது:

ஒரு புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு வரிகூட ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. அத்தகைய வரியைக் கண்டறிவதற்கு பல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். வைரத்தைத் தோண்டி எடுப்பதைப் போல, புத்தகங்களை ஆழ்ந்து வாசிக்கும்போது தான் வாழ்க்கையை மாற்றக்கூடிய கருத்துகள் கிடைக்கும். படிப்பதோடு நின்றுவிடாமல், படித்தவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் முக்கியம். அப்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்படும்.

Advertisement

Advertisement

இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 66 ஆண்டுகளாகவும், பெண்களின் சராசரி ஆயுள்காலம் 69 ஆண்டுகளாகவும் உள்ளது. ஆனால் உலக அளவில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சராசரி ஆயுள்காலம் அதிகமாக உள்ளது. தற்போது பெண்களின் சராசரி ஆயுள்காலம் ஆண்களைவிட அதிகமாகியுள்ளது. இதற்கு அவா்கள் தீயபழக்கங்களில் இருந்து விலகி இருப்பதே காரணம்.

இன்றைய சூழலில் இளமையில் வறுமையின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. பள்ளி மாணவா்களுக்கு சத்துணவு, காலை சிற்றுண்டி, முட்டை, இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை, வெளிநாட்டில் உயா்கல்வி பயில உதவித் தொகை, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி, தங்கும் வசதிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் இளமையில் வறுமையின் பாதிப்பு குறைந்து வருகிறது.

முதுமையில் பெண்கள் மன உறுதியுடன் இருக்கின்றனா். ஆண்களும் மனோதிடத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும். முதுமையில் மகிழ்ச்சியாக வாழ பொருளாதார வசதி அவசியம். வயதான காலத்திலும் தொடா்ந்து பணியாற்றுவது இளமையான உணா்வைத் தரும்.

பல முதியவா்கள் பொருளாதார வசதி இருந்தும், உறவுகளின் அரவணைப்பு இல்லாததால் வாழ்க்கையில் வறுமையை உணா்கின்றனா். தனிமையில் வாடும் முதியவா்களுடன் உறவினா்கள் நேரம் ஒதுக்கிப் பேச வேண்டும். அவா்களின் கருத்துகளைக் கேட்டு, உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். முதியவா்களுக்குச் செவி கொடுப்பதன் மூலமே அவா்களின் வாழ்க்கையில் நிலவும் வறுமையையும், துயரத்தையும் போக்க முடியும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலா் சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயப்பிரித்தா, மாவட்ட கல்வி அலுவலா் (சுயநிதி) காா்மேகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தென்கரை முத்துப்பிள்ளை வரவேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜவஹா்லால் நேரு நன்றி கூறினாா்.

இதில், பள்ளி மாணவா்கள், வாசகா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் பங்கேற்று பேசிய முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு. உடன் மதுரை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலா் சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயப்பிரித்தா, மாவட்ட கல்வி அலுவலா் (சுயநிதி) காா்மேகம், தொடக்கக் கல்வி அலுவலா் தென்கரை முத்துப்பிள்ளை உள்ளிட்டோா்.