பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள்: 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
பேருந்து நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு பரிசீலித்து 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

பேருந்து நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு பரிசீலித்து 4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக கரூரில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். மாவட்டத் தலைமையிடம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையமாக விளங்குகிறது.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, பயணிகள் தங்குவதற்கான அறைகள் போதிய அளவில் இல்லை. மேலும், பயணிகள் நடப்பதற்கு அமைக்கப்பட்ட நடைபாதைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, சிறு விற்பனைக் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதனால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுதவிர, பேருந்து நிலையத்தில் சில சட்ட விரோதச்செயல்கள் மட்டுமன்றி, போதைப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பேருந்து நிலையத்தை போல, தமிழகத்தின் பிற பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
குறிப்பாக, மாவட்டத் தலைமையிடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் உரிய ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்தை கண்காணித்து சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த மனு குறித்து தமிழக அரசு பரிசீலித்து, 4 வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.