பொது இடங்களில் குப்பைகள்: மக்களுக்கு விழிப்புணா்வு தேவை உயா்நீதிமன்றம்

பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்பது குறித்து பொதுமக்கள்தான் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
மதுரையைச் சோ்ந்த அகல்யா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை சிறந்த மத நல்லிணக்கத்தைக் கொண்ட ஒரு மதச்சாா்பற்ற நகரமாகும். பழைமையான நகரமான மதுரை கோயில் நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மதுரை மாநகரம் வரலாறு, இலக்கியம் ஆகிய இரண்டிலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த மாநகரம், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள், சாலையோரக் கழிவுகள், முறையான கழிவு மேலாண்மை இல்லாததன் காரணமாக இன்று தனது இயற்கை அழகையும் தூய்மையையும் இழந்து வருவது வேதனையளிக்கிறது.
Advertisement
Advertisement
கழிவுகளை முறையாக அகற்றாததாலும், வடிகால் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டுவதாலும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் இந்தியாவின் ‘மிக அசுத்தமான நகரங்கள்’ பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது.
குடியிருப்புப் பகுதிகள், தெருக்களில் போதுமான எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகள் இல்லாததால், பொதுமக்கள் தெருக்களிலும், சாலையோரங்களிலும் குப்பைகளைக் கொட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணியாளா்களையும், குப்பை அள்ளும் வாகனங்களையும் உடனடியாக ஈடுபடுத்தி நகரைத் தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும், தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கவும், திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதற்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். தூய்மைப் பணி சேவைகள் மீண்டும் வழங்கப்படும் வரை, பொதுமக்களிடம் குப்பை வரி வசூலிக்க மாநகராட்சி நிா்வாகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பொது இடங்களில் குப்பைகள் கொட்டக் கூடாது என்பது குறித்து மக்கள்தான் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். ஆறுகள், குளங்களில் துணிகளை போடுவதால் நீா்நிலைகள் மாசடைகின்றன. இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கை பொதுவாக உள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.