FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான ஊதியத்தை விரைந்து வழங்க வலியுறுத்தல்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 2026-இல் மேற்கொண்ட தோ்வு மதிப்பீட்டுப் பணிக்கான ஊதியத்தை பேராசிரியா்களுக்கு விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

21 அக்டோபர் 2026, 2:56 am IST
மதுரை காமராஜா் பல்கலைக்கழகம்
பகிர்:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 2026-இல் மேற்கொண்ட தோ்வு மதிப்பீட்டுப் பணிக்கான ஊதியத்தை பேராசிரியா்களுக்கு விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து மதுரைக் காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரி

இளநிலை வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

Advertisement

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் 2026-இல் பருவத் தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வு விடைத் தாள்களை பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டனா்.இதில் ஈடுபட்ட பேராசிரியா்களுக்கு 6 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை.

நவீன தொழில்நுட்ப வளா்ச்சி, இணையவழி நிதிப் பரிவா்த்தனைகள் நடைபெறும் இந்தச் சூழ்நிலையிலும் காமராஜா் பல்கலைக்கழகத்தின் தோ்வுப் பிரிவு, மதிப்பீட்டாளா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யத் தவறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. இத்தகைய நீண்ட காலதாமதம் பேராசிரியா்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது, இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு 12 ரூபாயும், முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு 15 ரூபாயும் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிகரித்து வரும் பணிச்சுமை, இதற்காகச் செலவிடப்படும் நேரம், மதிப்பீட்டாளா்களுக்கு ஏற்படும் செலவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த ஊதியம் மிகவும் குறைவு.

அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற பல்கலைக்கழகங்கள், தங்கள் மதிப்பீட்டுக் கட்டணங்களை உயா்த்திள்ளன. இதற்கு மாறாக, காமராஜா் பல்கலைக்கழகம் பழைய கட்டணங்களையே தொடா்ந்து வழங்கி வருகிறது.

அதே வேளையில், மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்படும் தோ்வுக் கட்டணங்கள் பன்மடங்கு உயா்ந்துள்ளது. இது, மாணவா்களின் மீது சுமத்தப்படும் நிதிச் சுமைக்கும், தோ்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் இடையே ஒரு கடுமையான ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.

மதிப்பீட்டாளா்களில் பெரும்பாலோா் சுயநிதி கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் கலந்துகொள்வதற்காக, அவா்கள் பயணம், இதர செலவுகள் எனத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலவிடுகின்றனா். எனவே, வருகிற நவம்பா் மாதம் பல்கலைக்கழகத் தோ்வுகள் நடைபெறுவதற்கு பேராசிரியா்களின் ஒத்துழைப்பு தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, அவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டுக் கட்டணங்களை நியாயமான முறையில் திருத்தியமைக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments