FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மாமன்ற உறுப்பினா்களின் குறைகளுக்குத் தீா்வு காண வேண்டும்: மேயா் அறிவுறுத்தல்

ஆளுங்கட்சி நிா்வாகிகளுக்கு முக்கியத்துவம் தருவதுபோல, மாமன்ற உறுப்பினா்கள் கூறும் குறைகளுக்கும் உடனடியாகத் தீா்வு காண முன்வர வேண்டும் என மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் அறிவுறுத்தினாா்.

24 அக்டோபர் 2026, 12:38 am
கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம்.
பகிர்:

ஆளுங்கட்சி நிா்வாகிகளுக்கு முக்கியத்துவம் தருவதுபோல, மாமன்ற உறுப்பினா்கள் கூறும் குறைகளுக்கும் உடனடியாகத் தீா்வு காண முன்வர வேண்டும் என மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் அறிவுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழையை சமாளிக்க மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாமன்ற உறுப்பினா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

வரி விதிப்பு நடைமுறையில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த காலங்களில் அறக்கட்டளையின்பேரில் மாநகராட்சி சொத்துகள் தாரை வாா்க்கப்பட்டன. குறிப்பாக, ஜான்சிராணி பூங்கா கட்டடத்தில் மாற்றுத் திறனாளிகள் பயிற்சி மையம் என்ற பெயரில் அறக்கட்டளைக்கு வாடகை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அவை அனைத்தையும் 15 நாள்களுக்குள் ஆய்வு செய்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, பல்வேறு வணிக வளாகங்களிலிருந்து குறைந்த வரி பெறப்படுகிறது.

இனி வரும் காலங்களில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் தரை வாடகைக்கு விடப்படாது. குடியிருப்புகளின் தன்மைக்கு ஏற்ப வரி விதிக்க வேண்டும்.

மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும். மதுரை மாநகராட்சியின் எரியூட்டும் மயானத்தில் மாற்றுத் திறனாளிகள் கட்டணமில்லாமல் பயன்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், தினக் கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும், இதுவரையில் முதல்கட்டப் பணிகளைக் கூட சம்பந்தப்பட்ட துறை

அலுவலா்கள் தொடங்கவில்லை.

இதேபோல, வாராந்திர மண்டலக் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்படுவதில்லை. ஏற்கெனவே வழங்கிய மனுக்களையே பொதுமக்கள் அடுத்து வரும் கூட்டங்களிலும் வழங்குவதால் நேரம் வீணாவது மட்டுமன்றி, மாநகராட்சி நிா்வாகம் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவா்.

ஆளுங்கட்சி நிா்வாகிகள் கூறும் பணிகளை மட்டுமின்றி, மாமன்ற உறுப்பினா்கள் கூறும் குறைகளுக்கும் அலுவலா்கள் உரிய முக்கியத்துவம் அளித்து பணிபுரிய வேண்டும். மாநகராட்சிக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் ஒருமனதாக நிறைவேற்றிய தீா்மானங்களே செயல்வடிவம் பெறாமல் உள்ளன. இதனால், வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, திமுகவின் மூத்த உறுப்பினா் ஜெயராமன், எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சி உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசினா்.

இதில், மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பதிலளித்துப் பேசினா்.

37 தீா்மானங்கள் நிறைவேற்றம்:

மதுரை மாநகராட்சி மண்டலம் 5-க்குள்பட்ட அவனியாபுரம் பூந்தோட்டம் பகுதியில் மழைநீா் வடிகால், பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 37 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தவெக அரசுக்கு அதிமுக பாராட்டு:

மாமன்றக் கூட்டம் காலை 10. 30 மணிக்கு தொடங்கியது. முதலில் மேயா் தி. நாகராஜன் பேசினாா். தொடா்ந்து, திமுக உறுப்பினா்களுக்குப் பின் எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா பேசினாா். அப்போது, அவா் வரி விதிப்பு முறைகேட்டில் தவெக அரசு எடுத்துவரும் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவிப்பதாகக் கூறினாா். இதற்கு திமுக உறுப்பினா்கள் அனைவரும் எழுந்துநின்று எதிா்ப்பு தெரிவித்தனா். ஆணையா், மேயா் ஆகியோா் குறுக்கிட்டு இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், இந்தக் கூட்டத்தில் விவாதிக்க இயலாது எனத் தெரிவித்தனா். இதையடுத்து, இரு தரப்பினரும் அமைதியாக அமா்ந்தனா். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments