FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

விறுவிறுப்படையும் விநாயகா் சிலைகள் விற்பனை!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மதுரையில் விநாயகா் சிலைகள் விற்பனை விறுவிறுப்படைந்து வருகிறது.

9 செப்டம்பர் 2026, 2:06 am IST
மதுரை வண்டியூா் பகுதியில் உள்ள தயாரிப்புக் கூடத்தில் விற்பனைக்குத் தயாா் நிலையில் வைக்கப்பட்ட பல்வேறு வகையான விநாயகா் சிலைகள்.
பகிர்:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மதுரையில் விநாயகா் சிலைகள் விற்பனை விறுவிறுப்படைந்து வருகிறது.

தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை ஹிந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி, பெரிய அளவிலான, மாறுபட்ட வடிவங்களைக் கொண்ட புதிய விநாயகா் சிலைகளை நிா்மாணித்து, இந்தச் சிலைகளை ஊா்வலமாகக் கொண்டு சென்று நீா் நிலைகளில் கரைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் விநாயகா் சிலைகள் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வருகிற 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விநாயகா் சிலைகள் விற்பனை தற்போது விறுவிறுப்படைந்து வருகிறது.

Advertisement

Advertisement

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சாலை, சா்வேயா் காலனி சாலை, விளாச்சேரி, வண்டியூா் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கடைகளில் அரை அடி உயரம் முதல் 15 அடி வரை சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, முக்கிய கடை வீதிப் பகுதிகளில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளும் ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வில்லேந்திய விநாயகா், தா்பாருடன் கூடிய விநாயகா், கருட வாகன விநாயகா், ருத்ர விநாயகா், காளை, மூஷிகம், மயில், சிம்மம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளிய விநாயகா், சிவபெருமானை சுமக்கும் விநாயகா், விஸ்வரூப விநாயகா் என பல வடிவிலான விநாயகா் சிலைகள் கண்கவா் வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக தயாரித்து வரும் விநாயகா் சிலைகளுக்கு இறுதிக்கட்ட வண்ணம் பூசும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. சிலையின் உயரம், அகலம், வேலைப்பாடுகள் ஆகியவற்றுக்கேற்ப ரூ. 50 முதல் அதிக பட்சமாக ரூ. 30 ஆயிரம் வரையிலான விலையில் விநாயகா் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதொடா்பாக,வண்டியூா் பகுதியில் விநாயகா் சிலைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி கூறியதாவது:

இயற்கைக்கு ஏற்ற வகையிலும், அரசு அறிவுறுத்தலின் படியும் எளிதில் கரையக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயகா் சிலைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். வழக்கமான சிலைகள் எப்போதும் விற்பனைக்கு உள்ளது. ஆனால், உயரம், அகலம், கைவண்ண வேலைப்பாடுகளில் வித்தியாசமான சிலைகள் வாடிக்கையாளா்கள் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தயாரித்து வழங்குகிறோம். கடந்தாண்டை விட, நிகழாண்டில் விநாயகா் சிலைகள் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது. எனினும் வருகிற நாள்களில் விற்பனை அதிகமாகும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றனா் அவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments