தொண்டி கடலியல் கல்லூரி காரைக்குடிக்கு மாற்றம்: மாணவர்கள் அவதி
தொண்டியில் இயங்கி வந்த கடலியல் கல்லூரி காரைக்குடிக்கு மாற்றப்பட்டதால் இப்பகுதியில் இருந்து படித்து வரும் மாணவ மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொண்டியில் இயங்கி வந்த கடலியல் கல்லூரி காரைக்குடிக்கு மாற்றப்பட்டதால் இப்பகுதியில் இருந்து படித்து வரும் மாணவ மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த 2001 ஆம் ஆண்டு கடலியியல் மற்றும் கடலோரவியல் கல்லூரியை அழகப்பா பல்கலைக்கழகம் நிறுவியது.
இக்கலூரிக்கு ஆய்வகமும் நூல் நிலையமும் வகுப்பறை விரிவாக்கமும் வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளின் படி கடந்த 2004 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம், தொண்டி ஐக்கிய ஜமாத் நிதியில் இருந்து ரூ.5லட்சம் பெற்று, சுமார் ரூ.30 லட்சம் செலவில் கல்லூரிக்குத் தேவையான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஆய்வகம் நூல் நிலையம், வகுப்பறை ஆகியவை செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இக்கல்லூரி காரைக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி கட்டடம் அரசு சுற்றுலா உணவகமாகவும், தங்கும் விடுதியாகவும் மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளிகள், மீனவர்களே வசித்து வருகின்றனர்.
தாமோதரம் பட்டிணம், எஸ்.பி.பட்டிணம், காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 20 மாணவர்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்குடிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அழகப்பா செட்டியார் எந்த நோக்கத்திற்காக கல்லூரியை இங்கு ஆரம்பித்தாரோ அந்த நோக்கம் நிறைவேறாமல் வியாபார நோக்கில் மாற்றப்பட்டுள்ளது என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தமுமுக மாநில செயலாளர் சாதிக் கூறுகையில், 20 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கபட்ட இக்கல்லூரியால் கடலோர மக்களின் வாழ்வாதரம், கடல் பற்றிய ஆராய்ச்சி, மீன் வளம் என பல்வேறு தகவல்கள் கிடைத்தன. தற்போது இங்கிருந்த இக்கல்லூரி நகருக்கு சென்று விட்டது. இப்பகுதி மாணவர்களின் கல்வி தரம் உயர சம்பந்தப்பட்ட கல்வித்துறையினர் தனிக்கவனம் செலுத்தி மீண்டும் தொண்டியில் கல்லூரியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.