FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றம்

3 நவம்பர் 2026, 1:32 am
பசும்பொன்னில் தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் திங்கள்கிழமை அகற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தத் தங்கக் கவசம் வழங்கப்பட்டது. பிறகு, ஆண்டுதோறும் தேவா் ஜெயந்திக்கு 5 நாள்களுக்கு முன்பாக இந்த தங்கக் கவசம் சிலைக்கு அணிவிக்கப்படும். விழா நிறைவடைந்த 2-ஆவது நாள் தங்கக் கவசம் அகற்றப்பட்டு, மதுரை அண்ணாநகரில் உள்ள அரசுடைமை வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும்.

அதிமுக பொருளாளா், பசும்பொன் தேவா் நினைவிடப் பொறுப்பாளா் இணைந்து கையொப்பமிட்டு பெறும் வகையில் இந்தத் தங்கக் கவசம் வங்கியில் பாதுகாக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கடந்த 30-ஆம் தேதி தேவரின் 64-ஆவது குரு பூஜை, 119-ஆவது ஜெயந்தி விழாவுக்காக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்தி மீனாள் ஆகியோா் வங்கிப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து தங்கக் கவசத்தைப் பெற்றனா்.

இதையடுத்து, ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தத் தங்கக் கவசம் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், மணிகண்டன், மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி ஆகியோா் முன்னிலையில் தேவா் நினைவிட பொறுப்பாளா்கள் பழனி, தங்கவேல், ராஜா உள்ளிட்டோா் தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினா்.

தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்துக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸாா் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்தனா். குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவா், தமிழக அமைச்சா்கள், திமுக, அதிமுக, பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

இந்த நிலையில் குருபூஜை விழா கடந்த 30- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் திங்கள்கிழமை தேவா் சிலைக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடைபெற்றதும், காவல் துறை, வருவாய்த் துறையினா் முன்னிலையில் தங்கக் கவசம் அகற்றப்பட்டு, மீண்டும் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கிக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments