திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பழுதடைந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பழுதடைந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 34 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருவாடானை, இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவா்களுடன் வரும் நபா்களின் குடிநீா் தேவையை நிறைவு செய்யும் வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. பல லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே பழுதடைந்தது. இதையடுத்து, குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க ஆழ்துளைக் கிணறு, குடிநீா் குழாய்கள், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. இதன்பின்னா், இவையும் செயல்படாமல் முடங்கின. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், அவா்களுடன் வரும் நபா்கள் பாதுகாப்பான குடிநீா் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், பணம் கொடுத்து கடைகளில் குடிநீா் வாங்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
Advertisement
Advertisement
எனவே, மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.