கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு, கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட
ஊதிய உயர்வு, கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை (டிச.18) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கையில் அச்சங்கத்தின் மாநில உதவிச் செயலர் எஸ்.செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எங்களது சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 25 நாள்களுக்கு மேல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்பட பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
முன்னதாக, சிவகங்கை வாரச் சந்தை சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சலகம் முன் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தின் கோட்டத் தலைவர் எம்.குருநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மானாமதுரையில்: மானாமதுரை, காரைக்குடி ஆகிய தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும் கிளை மற்றும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த அஞ்சலங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா சேவை முற்றிலும் முடங்கியது.
கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் போராட்டம் காரணமாக தபால்கள் தேக்கமடைந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊரகப் பகுதிகளில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
ராமநாதபுரம் நகர் பகுதிகளில் அஞ்சல் துறையினர் பணிபுரிவதால் பணிகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், கிராமப்புறங்களில் மாவட்ட அளவில் 464 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், தபால் அனுப்புவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டதாக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்டத்தலைவர் எஸ்.சேகர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.