திருக்கோஷ்டியூரில் பரமபதவாசல் திறப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நராராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நராராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
பகல் பத்து, ராப்பத்து, என வைகுண்ட ஏகாதசி உற்சவம் 20 நாள்கள் நடைபெறும். கடந்த டிச. 8 பகல் பத்து உற்சவம் தொடங்கி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 9 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சித் தந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். இரவு 7 மணிக்கு பெருமாள் ராஜாங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் தேவியருடன் எழுந்தருளினார். நம்மாழ்வார் எதிர்சேவை மேற்கொண்டார். தொடர்ந்து ஏகாதசி மண்டபம் சென்று பக்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்னர் மங்களாசாசனம் முடிந்து தென்னை மரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் சன்னதியில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமி தேவியருடன் எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு ராப்பத்து உற்சவம் தொடங்கியது.
இந்த உற்சவத்தில் தினசரி மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார், மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.