FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7 ஆம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 
செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலையில் ஆதிகேசவப் பெருமாள், பிராட்டியருடன் சயன கோலத்தில் எழுந்தருளினார்.  மாலையில் விஸ்வரூப தரிசனத்தில் சுவாமி காட்சியளித்தார். பின்னர் பிராட்டியருடன் பல்லக்கில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் இரவு 7 மணிக்கு எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள்  பெருமாளை வழிபட்டனர். 
கோதண்டராமர் கோயில்: ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் சுவாமி செவ்வாய்க்கிழமை இரவு பரமபதவாசலில் எழுந்தருளினார்.  திருப்புல்லாணி மற்றும் ராமநாதபுரம் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் பி.கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  தேவிபட்டினத்தில் உள்ள பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாள் கோயில் பிரகாரத்தில் திருவீதி உலாவந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விஷேச பூஜைகளும் நடைபெற்றன. சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பெருமாள் ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்:  ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பகல் 12 மணிக்கு ராமர் மற்றும் பூதேவி, தேவியுடன் தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி ராமர் தீர்த்தம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ராமர் தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதன் பின்பு அங்கிருந்து, மாலையில் புறப்பட்டு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள சேதுமாதவர் சன்னதியில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி,பேஸ்கார்கள் அண்ணாத்துரை,கலைச்செல்வன்  உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
சிவகங்கையில்: சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளிய பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரைக்குடியில்: காரைக்குடி அருகே "தென்திருப்பதி' என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காலை 6.15 மணிக்கு பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் என். சீனிவாசன், செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி, காரைக்குடி, தேவகோட்டை, அரியக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூரில்: திருப்பத்தூர் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாள் 7.45 மணிக்கு மேல் 8.40 மணிக்குள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். சுவாமியைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோயிலை வலம் வந்தனர். இதேபோல் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மானாமதுரையில்: மானாமதுரை வீரழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை உற்சவர் சுந்தரராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் மலர் அலங்காரத்தில் 5.30 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். புரட்சியார்பேட்டை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத உற்சவர் பெருமாள் சர்வ அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். 
தேவகோட்டையில்: தேவகோட்டை கோதண்டராமர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதல் திரளான பக்தர்கள் கூடினர். கோதண்டராமருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்
றது. பின்னர், அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பரமபதவாசல் வழியே சுவாமி எழுந்தருளினார். பின்னர், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments