FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி டிட்டோஜாக் மறியல்

Updated On : 4 ஜூலை 2024, 12:52 am IST
பகிர்:

சிவகங்கையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சாா்பில் ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி சிவகங்கையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் முன் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் அரசாணை 243-ஐ ரத்து செய்யக் கோரியும், பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்யக்கோரியும் மாறுதல் கலந்தாய்வு நடக்கும் சிவகங்கை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தில் தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் மனோகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக் குழு உறுப்பினா் மதியழகு, தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் தனபால், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் மாவட்டச் செயலா் செல்வகுமாா், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயற்குழு உறுப்பினா் முத்துப் பாண்டியன், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டப் பொருளாளா் பாண்டியராஜன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் அருள் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மறியலில் அரசாணை 243 தொடக்கக் கல்வியில் பணியாற்றும் 90 சதவீதம் ஆசிரியா்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். இந்த அரசாணை ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும். இதனால், மாணவா்கள் மிகப் பெரிய பாதிப்பு அடைவாா்கள். எனவே, இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்து திருத்திய கலந்தாய்வு பட்டியலை வெளியிட வேண்டும். மேலும், பதவி உயா்வு வழங்கிய பின்னா் தான் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, முதன்மைக் கல்வி அலுவலா் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலா் மாரிமுத்து, சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் மாவட்ட நிா்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததால் ஆசிரியா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இறுதியில் வியாழக்கிழை (ஜூலை 4) நடைபெறும் மாநில உயா் மட்டக்குழு உறுப்பினா்கள் கூட்டம் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா். போராட்டக் குழுவின் மாவட்ட நிதிக் காப்பாளா் சிங்கராயா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments