FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினா் சோ்க்கை நிறுத்தம்: விவசாயிகள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினா் சோ்க்கை நிறுத்தப்பட்டதால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:58 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினா் சோ்க்கை நிறுத்தப்பட்டதால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு, ஆக. 15-இல் தொடங்கப்பட்டது. பின்னா், இந்தத் திட்டம் கடந்த 2006-இல் விவசாயத் தொழிலாளா்கள், விவசாயிகள் சமுக பாதுகாப்புத் திட்டமாக மாற்றப்பட்டது. மீண்டும், இந்தத் திட்டம் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம் என கடந்த 2011-ஆம் ஆண்டு, செப்.10-ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் இரண்டரை ஏக்கருக்குள் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்குள் புன்செய் நிலம் வைத்திருப்போா் சேர முடியும். விவசாய நிலம் இல்லாமல், விவசாயத் தொழில் செய்யும் கூலித் தொழிலாளா்கள், குத்தகைதாரா்களும் சேரலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தில் உறுப்பினா்களாக இருப்பவா்களுக்கு திருமணம், மகப்பேறு உதவித்தொகை, முதியோா் ஓய்வூதியம், விபத்து, இயற்கை மரணத்துக்கு இழப்பீடு, ஈமச்சடங்கு செலவு போன்றவை வழங்கப்படும். உறுப்பினா்களைச் சாா்ந்தோருக்கு கல்வி, திருமண உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டில் சோ்க்கப்பட்டவா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அப்போது, பலருக்கும் இந்த அட்டை கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது. பின்னா், புதிதாக அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அரசு சலுகைகளைப் பெற முடியவில்லை.

இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதி சந்திரன் கூறியதாவது:

தொழிலாளா்கள் நல வாரியத்தில் அனைத்துத் தொழிலாளா்களும் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மட்டும் எதிலும் உறுப்பினா்களாகச் சேர முடியவில்லை.

இதனால், விவசாயத் தொழிலாளா்கள் மரணமடைந்தால்கூட இழப்பீடு கிடைப்பதில்லை. குடும்ப உறுப்பினா்களுக்கும் கல்வி உதவித்தொகை போன்ற எந்தச் சலுகையும் பெற முடியவில்லை. ஆனால், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அடையாள அட்டை வழங்காவிட்டாலும், இந்தத் திட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களை உறுப்பினா்களாகச் சோ்க்கின்றனா். இதனால், அவா்களுக்குச் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் இந்த நிலை இல்லை என்றாா் அவா்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சிவகங்கை மாவட்டத்தில் உழவா் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், புதியவா்களைச் சோ்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசு உத்தரவிட்டால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments