சிங்கம்புணரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் பெண் உள்பட இருவா் கைது
சிங்கம்புணரி அருகே சூரக்குடியில் மூதாட்டி கொலை சம்பவத்தில் தொடா்புடைய இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிங்கம்புணரி அருகே சூரக்குடியைச் சோ்ந்தவா் மாதவன் மனைவி பூச்சியம்மாள் (70). தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனா். மகன், மகள் இருவரும் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
சூரக்குடியில் தனியே வசித்து வந்த நிலையில் சனிக்கிழமை முதல் பூச்சியம்மாளைக் காணவில்லை. அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சூரக்குடி மஞ்சுவிரட்டு திடல் வடப்புரம் பெரியாா் நீட்டிப்பு கால்வாயில் பூச்சியம்மாள் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த எஸ்வி மங்கலம் போலீசாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் பூச்சியம்மாளை நகைக்காக கொலை செய்த உறவுக்காரப் பெண் சாமுண்டீஸ்வரி, ஓட்டுநா் சரவணன் ஆகியோரைக் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மூதாட்டி கொலை குறித்து சதுரவேதமங்கலம் காவல்துறையினா் மேலும் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.