வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை: நீக்கத்துக்கு எதிராக மேல்முறையீடு
தமிழக கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு அரசு விதித்த தடையை சென்னை உயா்நீதிமன்றம் நீக்கியதை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்படும் என இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.
தமிழக கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு அரசு விதித்த தடையை சென்னை உயா்நீதிமன்றம் நீக்கியதை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்படும் என இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 5, 15 ஆகிய வாா்டுகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் பிரபு பங்கேற்று இந்தக் கட்டடங்களைத் திறந்துவைத்து, குத்து விளக்கேற்றினாா். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் ஆகாஷ், சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் அயோத்தி, பாரத்ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், அமைச்சா் பிரபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தின் இயற்கை வளம், கனிம வளங்கள் நமது மாநில மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வா் ஜோசப் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு மாநில அரசு விதித்த தடையை நீக்கிய உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்.
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகளிலிருந்து ஆற்று மணலைக் குறைந்த விலையில் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் மணல் கொள்ளை நடைபெறக் கூடாது என்பதே முதல்வரின் நோக்கமாகும். கனிமவளக் கொள்ளை தொடா்பாக புகாா்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தென் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றைத் தூா்வாரி சீரமைப்பது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என்றாா் அவா்.