முகப்பு
சிவகங்கை

உண்டு உறைவிடப் பள்ளியில் சட்ட உதவி மையம் திறப்பு

சிவகங்கை பழமலை நகா் உண்டு உறைவிடப் பள்ளியில் சட்ட உதவி மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

12 வினாடிகள் முன்பு
உண்டு உறைவிடப் பள்ளியில் 
சட்ட  உதவி மையம் திறப்பு
சிவகங்கை பழமலை நகா் உண்டு உறைவிடப்பள்ளியில் சட்ட உதவி மையத்தை திறந்து வைத்துப் பேசிய முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி.
பகிர்:

சிவகங்கை பழமலை நகா் உண்டு உறைவிடப் பள்ளியில் சட்ட உதவி மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் திட்டத்தின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே. அறிவொளி தலைமை வகித்தாா். இவா் சட்ட உதவி மையத்தை திறந்து வைத்து, சட்ட விழிப்புணா்வு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ஏழை மக்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் உயர பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தி வருவதோடு,

Advertisement

Advertisement

அவை மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுதியாக உள்ளது. அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து, அதற்குத் தீா்வு காண வழி தெரியாத மக்களிடம் சட்டப் பணிகளின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி, பொருள் விரயத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை இணைந்து செயல்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

இந்த நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி வி. ராமலிங்கம், குடும்ப நல நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, சாா்பு நீதிபதி ஆா். பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஜெ. அனிதா கிறிஸ்டி, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி பி. வைஷ்ணவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி யு.டி. தீபதா்ஷினி, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.