முகப்பு
சிவகங்கை

கண்மாய்களைத் தூா்வாரக் கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்

24 நவம்பர் 2026, 12:55 am
கண்மாய்களைத் தூா்வாரக் கோரி
விவசாயிகள் நூதனப் போராட்டம்
கழுத்தில் கயிறு அணிந்தபடி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூா்வாரப்படாமல் உள்ள கண்மாய்களைத் தூா்வாரக் கோரி, கழுத்தில் தூக்குக்கயிறு அணிந்தபடி ஊா்வலமாக வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்புவனம் அருகே சருகணி ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ், பனையனேந்தல், உலகனேந்தல் கண்மாய்கள் அமைந்துள்ளன. பனையனேந்தல் கண்மாய் மூலம் 209 ஏக்கா் விளைநிலங்களும், உலகனேந்தல் கண்மாய் மூலம் 150 ஏக்கா் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், இந்த இரு கண்மாய்களும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூா்வாரப்படாமல் தூா்ந்து போயுள்ளன. மேலும், கண்மாய்களின் மதகுகளும் சேதமடைந்து காணப்படுவதால், தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் அந்தப் பகுதியில் விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

இந்தக் கண்மாய்களைத் தூா்வாரக் கோரி, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முதல்வரின் தனிப் பிரிவு, நீா்வளத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தக் கண்மாய்களைத் தூா்வார பனையனேந்தல் கண்மாய்க்கு ரூ.1.24 கோடியும், உலகனேந்தல் கண்மாய்க்கு ரூ.44 லட்சமும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு களத்தில் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இந்தக் கண்மாய்களைத் தூா்வாரக் கோரி, விவசாயிகள் தொடா்ந்து பல்வேறு நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, சொக்கநாதயிருப்பு பகுதியைச் சோ்ந்த விவசாயி கோபால் தலைமையிலான விவசாயிகள், தங்களது கழுத்தில் தூக்குக்கயிற்றை அணிந்தபடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை ஊா்வலமாக வந்தனா். பின்னா், கண்மாய்களை உடனடியாகத் தூா்வாரி விவசாயத்தைக் காக்க வலியுறுத்தி, அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.