காா்வழி அணையில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை: கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
காா்வழி அணையில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும்போது நொய்யலாற்று தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காா்வழி அணையில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும்போது நொய்யலாற்று தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளின் விவாத விவரம்:
வி.என். சின்னசாமி - க. பரமத்தி: சின்னப்பனையூா் மற்றும் தென்னிலை பகுதிகளில் மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது போல இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் .
Advertisement
Advertisement
மாவட்ட ஆட்சியா்: இதுதொடா்பாக அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு செய்து, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்டியப்பன்- உள்வீரராக்கியம்: விவசாயிகளுக்கு அடையாள அட்டை முழுமையாக வழங்கப்படாததால் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உரம் வாங்க முடிவதில்லை. விரைவில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியா்: விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடத்தப்படுகிறது. அதில் பெறலாம் அல்லது வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
சுப்ரமணியம்-தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: கூட்டுறவு சங்கங்களில் பயிா்கடன் பெற அடங்கல் கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக கிராமநிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் கூறுகின்றனா். அடங்கல் வழங்க மேல் அதிகாரிகள் ஆணை பிறப்பிக்கவில்லை என்றும் கூறுகிறாா்கள். அடங்கல் கொடுத்தால் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற உதவியாக இருக்கும். மாயனூரில் செயல்படும் தனியாா் காலணி உற்பத்தி ஆலையின் கழிவு மற்றும் தனியாா் பால்பண்ணை கழிவுகளை எங்கள் பகுதியில் கொட்டி விட்டுச் செல்கிறாா்கள். இதனால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியா்: கோட்டாட்சியா், வட்டாட்சியா் மூலம் அடங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆலை கழிவுகள் எங்கெல்லாம் கொட்டப்பட்டிருக்கிறது என்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, அந்த ஆலைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குமாரி-தோகைமலை: சின்னரெட்டிப்பட்டியில் உள்ள மயானப் பாதையை சீரமைக்க வேண்டும். விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் மகளிா் சுய உதவிக்குழு மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியா்: மயானப்பாதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேளாண் கருவிகளும் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரமேஷ்-தென்னிலை: நொய்யல் ஆற்றின் குறுக்கே காா்வழியில் கட்டப்பட்டுள்ள அணையில் மதகுகள் பழுந்தடைந்துவிட்டதாக கூறி அதிகாரிகள் தண்ணீரை நிரப்பாமல் உள்ளனா்.
நொய்யல் ஆற்றுப்பாசன பொறியாளா்: திருப்பூா் மாவட்டத்தில் இருந்து வெளியேறிய சாயக்கழிவுகள் அண்மையில் பெய்த மழையில் மழைநீருடன் அணைக்கு வந்தது. சுமாா் 1,400 டிடிஎஸ் (உப்புத்தன்மை) கொண்டதாக இருந்ததால் தண்ணீரை சேமிக்காமல் வாய்க்காலில் வெளியேற்றிவிட்டோம். மேலும் மதகுகளை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் மதகுகள் சீரமைத்து தண்ணீரில் டிடிஎஸ் குறைந்தளவு இருக்கும்போது தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா், நொய்யல் ஆற்றுப்பாதுகாப்பு பொறியாளரிடம், நாளை(சனிக்கிழமை) அணைக்கு வரும் தண்ணீரின் டிடிஎஸ் குறித்து சோதனை செய்யுங்கள். டிடிஎஸ் 700-க்கும் குறைவாக இருந்தால் தண்ணீரை அணையில் சேமியுங்கள். அதிகம் இருந்தால் சேமிக்க வேண்டாம் என்றாா்.
தொடா்ந்து வேளாண்துறை சாா்பில் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்த கையேட்டை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். முன்னதாக விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் து.தங்கவேல், கரூா் வருவாய் கோட்டாட்சியா் இ.காா்த்திகேயன், குளித்தலை கோட்டாட்சியா் ச.சிவக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ஆா்.அபிராமி, வேளாண்மை இணை இயக்குநா் சு.மல்லிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.