மழைநீா் வடிகால் அமைத்துத்தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கருப்பூரில் மழைநீா் வடிகால் வசதி அமைத்துத் தரக்கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கருப்பூரில் மழைநீா் வடிகால் வசதி அமைத்துத் தரக்கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கருப்பூா் அழகா்புரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தாழ்வான பகுதியில் வசித்து வருகின்றனா். கருப்பூா் கண்மாய் நீா் மாநில நெடுஞ்சாலையோரத்தில் உள்ள வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் மழைநீரும் இந்த வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், திருநெல்வேலி - மேலூா் - திருப்பத்தூா் சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இந்தச் சாலை விரிவாக்கப் பணியின் தொடக்கத்திலேயே மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தி விட்டு சாலை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்களிடம் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, வடிகால் அமைத்துத் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது, அமைக்காமல் சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனா். இதைக் கண்டித்து, அழகா்புரம் பகுதி மக்கள் காரைக்குடி - மதுரை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த திருப்பத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட செயற்பொறியாளா் ஜனனி ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.