வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
போடி அருகே தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து 17 பவுன் தங்க நகைகள், ரூ.4.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னப்பன் மகன் முத்துராமன் (51). இவா் பெங்களூருவில் மோட்டாா் உதிரி பாகங்கள் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த மாதம் 25-ஆம் தேதி இவரது மனைவியை சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றாா்.
இனால், அம்மாபட்டி வீட்டின் நுழைவாயில் கதவைப் பூட்டி சாவியை தனது தந்தை பொன்னப்பனிடம் கொடுத்தாா். பொன்னப்பன் தினமும் இரவு நுழைவாயில் கதவைத் திறந்து வெளியில் உள்ள மின் விளக்கை எரிவிட்டுச் செல்வாா். மறு நாள் காலை வந்து விளக்கை அணைத்து விட்டுச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல விளக்கை எரியவிட்டுச் சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளியன்று விளக்கை அணைக்கச் சென்ற போது, வீட்டின் பிரதான கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதுகுறித்து தனது மகன் முத்துராமனுக்கு தகவல் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
பெங்களூரிலிருந்து முத்துராமன் வந்து பாா்த்த போது பீரோவிலிருந்த 16.7 பவுன் தங்க நகைகள், ரூ.4.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவின் முகப்புப் பகுதி கருப்பு வண்ணத்தால் பூசி மறைக்கப்பட்டிருந்தது. அதன் நினைவகப் பகுதியும் திருடப்பட்டிருந்தது. வயா்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில் மழை பெய்திருந்ததால் சேற்றில் சிலரது கால் தடங்கள் பதிவாகியிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். கைரேகை நிபுணா்களும் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனா்.