முகப்பு
தேனி

மருத்துவ குணம் இருப்பதாகக் கூறி கம்பத்தில் கழுதைப்பால் விற்பனை

மருத்துவ குணம் இருப்பதாகக் கூறி கம்பத்தில் கழுதைப் பால் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது.

25 வினாடிகள் முன்பு
மருத்துவ குணம் இருப்பதாகக் கூறி கம்பத்தில் கழுதைப்பால் விற்பனை
பால் விற்பனைக்காக கம்பத்தில் தெருத் தெருவாக வியாபாரிகளால் அழைத்துச் செல்லப்படும் கழுதைகள்.
பகிர்:

மருத்துவ குணம் இருப்பதாகக் கூறி கம்பத்தில் கழுதைப் பால் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிலா், கழுதைகளுடன் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முகாமிட்டு, தெருத் தெருவாகச் சென்று கழுதைப் பால் விற்பனை செய்கின்றனா். இவா்கள் குழுக்களாகப் பிரிந்து, பொதுமக்கள் முன்னிலையில் கழுதைகளிடமிருந்து நேரடியாக பாலை கறந்து விற்பனை செய்கின்றனா். ஒரு சங்கு கழுதைப் பால் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கழுதைப் பாலைக் குடிப்பதால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடல் உறுப்புகள் வலுப்பெறும் எனவும், பல்வேறு நோய்கள் குணமாகும் எனவும் கூறி விற்பனை செய்கின்றனா். இதை நம்பி ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு கழுதைப் பாலை வாங்கி அருந்த கொடுக்கின்றனா். இதனால் கம்பம் பகுதியில் கழுதைப்பால் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கழுதைப்பால் வியாபாரி ஒருவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு ஊா்களுக்கு கழுதைகளுடன் சென்று, 10 நாள்கள் வரை முகாமிட்டு பால் விற்பனை செய்கிறோம். பொதுமக்களின் கண் முன் பாலை கறந்து, கலப்படமின்றி வழங்குகிறோம். இதற்காக கழுதைகளை சுத்தமாகப் பராமரிக்கிறோம். கால்நடை மருத்துவா்களிடம் அவ்வப்போது பரிசோதனை செய்து, அவற்றுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாா்த்துக் கொள்கிறோம் என்றாா்.

இதற்கிடையே, கழுதைப்பால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும், காய்ச்சாத பாலில் நோய்க் கிருமிகள் இருக்க வாய்ப்பிருப்பதால், அதை குழந்தைகளுக்குக் கொடுப்பதில் எச்சரிக்கை தேவை என்றும், குழந்தைகளுக்கு கழுதைப்பால் அருந்த தருவதற்கு முன்பு குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.