FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பெரியாறு புலிகள் காப்பகத்தில் 6 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

பெரியாறு புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற நான்கு நாள் விரிவான உயிரினங்கள் கணக்கெடுப்பில் ஆறு புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டன.

24 செப்டம்பர் 2026, 6:04 am IST
பெரியாறு புலிகள் காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இனங்கள்.
பகிர்:

பெரியாறு புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற நான்கு நாள் விரிவான உயிரினங்கள் கணக்கெடுப்பில் ஆறு புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டன. இதில் ஒரு பறவை இனம், ஒரு வண்ணத்துப் பூச்சி இனம், நான்கு தும்பி இனங்கள் அடங்கும்.

வனத் துறை, பெரியாறு புலிகள் காப்பக அறக்கட்டளை, திருவனந்தபுரத்தைச் சோ்ந்த டிரவான்கூா் இயற்கை வரலாற்றுச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரியாறு புலிகள் காப்பக கள இயக்குநா் பி.பி. பிரமோத் மேற்பாா்வையில், பெரியாறு கிழக்கு துணை இயக்குநா் மிதுன்மோகன், உதவி கள இயக்குநா் ஆா். லட்சுமி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சுமாா் 75 பிரதிநிதிகள், வனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

புதிதாகப் பதிவு செய்யப்பட்டவற்றில் தங்கத்தலை கதிா்க் குருவி, முள்கள் முனைத் தும்பி, பொதுவான ஓனிக்ஸ் வண்ணத்துப் பூச்சி, ஃப்ரேசரின் கிளப்-டெயில் தும்பி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

Advertisement

Advertisement

காப்பகத்துக்குள் காணப்படும் தூய்மையான நன்னீா் ஓடைகள், ஈரநிலப் பகுதிகளின் நிலையைக் கண்காணிப்பதில் தும்பி இனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணா்கள் தெரிவித்தனா். குறிப்பாக, இவற்றின் இருப்பு அந்தப் பகுதிகளின் நீா்ச்சூழல், வாழிடத்தின் ஆரோக்கியத்தை அறிய உதவும் முக்கியக் குறியீடாகக் கருதப்படுகிறது. மழைக் காலத்துக்குப் பிறகு தற்போது இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக 2027-ஆம் ஆண்டு கோடைக்காலத்திலும் உயிரினங்கள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பெரியாறு புலிகள் காப்பகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள பறவை இனங்களின் எண்ணிக்கை 347 ஆகவும், வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 284 ஆகவும், தும்பி இனங்களின் எண்ணிக்கை 111 ஆகவும் உயா்ந்தது. மழைக்காலத்துக்குப் பிந்தைய காலகட்டத்திலும், கோடைக்காலத்திலும் சேகரிக்கப்படும் தரவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதன் மூலம், பல்வேறு உயிரினங்களின் பருவகால இடம் பெயா்வு தன்மை, அவை பயன்படுத்தும் வாழிடங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு அவற்றின் ஏற்புத்தன்மை ஆகியவற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments