இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு இடவசதி செய்து தர கோரிக்கை
சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தங்கும் இட வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தங்கும் இட வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
இதில், தை, ஆடி மாதங்களில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது, இக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது வருகிறது. இத்திருவிழாவுக்காக ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகின்றனர். ஆனால், பக்தர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. கோயில் நிர்வாகம் சார்பில் 2 இடங்களில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு விடுதியில் 15 அறைகள் மட்டுமே உள்ளன. அவற்றை கோயில் பூசாரிகள் முன்னதாகவே பதிவு செய்து, தங்களது உறவினர்களுக்கு வாடைகைக்கு விடுவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்று கோயில் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு விடுதி சிதிலமடைந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால், தற்போது இந்த விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.
இதனால், இங்கு வரும் பக்தர்கள் தங்க வசதியின்றி, ஆற்றுப்படுகையில் தனியாரால் அமைக்கப்பட்டுள்ள தகர செட்களில் அதிக கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, பக்தர்கள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும் அல்லது சிதலமடைந்துள்ள கட்டடத்தை சீரமைத்து தரவேண்டும் என, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறியது: கோயில் அருகே உள்ள மண்டபங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட உள்ளன. இது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. விரைவில் மண்டபங்கள் அனைத்தும் சரிசெய்து முறையாக பராமரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.