காட்டுப்பன்றி பிரச்சனைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
காட்டுப்பன்றி பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என வனத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
காட்டுப்பன்றி பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என வனத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வன விரிவாக்க மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவிமீனா தலைமை வகித்தாா். உதவி வன பாதுகாப்பு அலுவலா் ஞானப்பழம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
Advertisement
Advertisement
விவசாயி ராமமூா்த்தி (ஸ்ரீவில்லிபுத்தூா்): தென்காசி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகவல்லி அணை சேதமடைந்ததால் விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். அணையை பாா்வையிட விவசாயிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.
விவசாயி ஜோசப் ஆரோக்கிய ராசையா (நத்தம்பட்டி): பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடா்ந்தால் விவசாயிகள் தொடா்ந்து விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்.
விவசாயி தேவப்பிரியன் (ஸ்ரீவில்லிபுத்தூா்): வனத்துறை குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
விவசாயி அம்மையப்பன் (சேத்தூா்): வனவிலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்திற்கு காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு பெறும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். சேத்தூா் மலையடிவாரத்தில் உள்ள சின்னையன் கோட்டை அணையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்.
விவசாயி ராமச்சந்திர ராஜா (ராஜபாளையம்): ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக சூழல் பாதுகாப்பு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். காட்டுத்தீ பரவுவதை தடுக்க நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துவதுடன், தீத் தடுப்பு பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்திற்கு 15 நாள்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயி ஞானகுரு (மம்சாபுரம்): ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கோயிலுக்குச் செல்லும் மக்களிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கண்மாய்களில் உள்ள கருவேலமரங்கள் அடா்ந்த புதா்களில் காட்டுப்பன்றிகள் வசித்து வருவதால், கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு பதிலளித்து வனத்துறையினா் கூறியதாவது: மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க விவசாயிகள் மாற்றுப் பயிா் சாகுபடிக்கு மாற வேண்டும். விவசாயிகளின் பயிா் சேதத்திற்கு ரூ.36 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு பெற விண்ணப்பித்த 160 மனுக்கள் நிலுவையில் உள்ளன. சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள செங்கல் சூளைகளை அகற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. கிராம அளவில் குழு அமைத்து காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.