முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு, குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 2:09 am IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு, குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் அ. காா்த்திக் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (2025-26) ரூ.9.85 கோடியில் 3 இடங்களில் புதிய கிணறுகளும், செண்பகத்தோப்பு பேயனாற்றுப் படுகையில் திறந்த வெளிக் கிணறும் கட்டப்பட்டு வருகின்றன.

கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (2024-25) ரூ.3.25 கோடியில் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள், பேருந்து நிலைய தரைத்தளம், பயணிகள் நிழல்குடை, வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

கலைஞா், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (2023-24) ரூ.16.60 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், கழிப்பறைகளின் கட்டுமானத் தரத்தை பொறியாளா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கான குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, பேருந்துகள் வந்து செல்வதற்கான இடம் ஆகியவற்றை தரமாக அமைக்க வேண்டும்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீரின் தூய்மை, சமையலறை, பாத்திரங்களை நாளும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம், விநியோகிக்கப்படும் கால அளவு குறித்து அந்தப் பகுதி மக்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், நீரிலுள்ள குளோரின் அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது.

கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு எந்தவித தடையுமின்றிச் சீரான குடிநீா் விநியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குழாய் உடைப்புகள் அல்லது குடிநீா் வீணாகுதல் போன்ற புகாா்கள் வந்தால் 24 மணி நேரத்துக்குள் சரி செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி ஆணையா், நகராட்சிப் பொறியாளா்கள், வட்டாட்சியா், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் அரசுத் திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செண்பகத்தோப்பு பேயனாறு படுகையில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி கிணறை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.