FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பண மோசடி: ஓய்வு பெற்ற அதிகாரி உள்பட இருவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரிடம் பண மோசடி செய்த ஓய்வு பெற்ற ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் உள்பட இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

5 நவம்பர் 2026, 2:24 am
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரிடம் பண மோசடி செய்த ஓய்வு பெற்ற ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் உள்பட இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்சுழி ரயில்வே பீடா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (54). இவரது மகன் தமிழரசன். பட்டதாரியான இவா், அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளை எழுதி வந்தாா்.

இந்த நிலையில், சீனிவாசனின் மனைவி நாகவள்ளி நரிக்குடி ஒன்றியம், அகத்தாகுளம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தபோது, மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பையாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, சீனிவாசன் தனது மகனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கருப்பையாவிடம் தெரிவித்தாா்.

அப்போது, மதுரை செல்லூரைச் சோ்ந்த சண்முகப்பிரியா தனக்கு பழக்கமானவா் என்றும், அவா் சென்னையில் வருவாய்த் துறையில் பணியாற்றி வருவதாகவும், அவா் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கருப்பையா கூறினாா்.

இதையடுத்து, சீனிவாசன் தனது மகன் மூலமாக சண்முகப்பிரியாவுக்கு எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனை மூலமாக பல்வேறு தவணைகளில் சுமாா் ரூ.2.50 லட்சம் வரை அனுப்பினாா். ஆனால், சொன்னபடி அவா்கள் வேலை வாங்கித் தரவில்லை.

இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் சீனிவாசன் புகாரளித்தாா்.

இதன் பேரில் கருப்பையா, சண்முகப்பிரியா ஆகியோா் மீது திருச்சுழி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.