FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காரைக்கால் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற பரமபதவாசல் திறப்பில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
காரைக்காலில் பிரசித்திப் பெற்று விளங்கும் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவர் ஸ்ரீரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் வீற்றிருந்தவாறு காட்சியளிக்கிறார். உத்ஸவர் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல்பத்து, இராப்பத்து நிகழ்ச்சி இக்கோயிலில் நடைபெற்று வருகிறது. பகல்பத்து நிகழ்ச்சி கடந்த டிச. 8-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்து, இராப்பத்து செவ்வாய்க்கிழமை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
காலை 5.30  மணியளவில் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ரத்னாங்கியில் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, கோயிலில் உள்ளேயும், வெளியேயும் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். நிகழ்ச்யின்போது, ஆழ்வார்களுக்கும் அருளப்பாடு நடைபெற்றது. பரமபதவாசல் திறப்பையொட்டி  வஜ்ராங்கியில் அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் ஸ்ரீரங்கநாதப் பெருமாளையும், உத்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளையும் நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.
இதேபோன்று காரைக்கால் ஸ்ரீகோதண்டராம பெருமாள் கோயிலில் கோதண்டராமர் பரமபதவாசல் திறப்பில் காட்சியளித்தார்.  திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டு, சுவாமிகள் வீதியுலா  நடைபெற்றது. 
ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இராப்பத்து நிகழ்ச்சியின் 8-ஆவது நாளான டிச. 25-ஆம் தேதி திருவேடுபறி உத்ஸவமும், டிச. 27-ஆம் தேதி திருவடி தொழுதல் எனும் நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. நிறைவு நாளின்போது இறைப்பா சாற்றுமுறை நடைபெறுகிறது. 
அப்போது, நாலாயிரதிவ்யபிரபந்தத்தில் கடைசி ஆயிரத்தை ஒரே நாளில் சேவிக்கப்படவுள்ளது. இவ்வகையில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து நிறைவடைகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments