FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

8 நவம்பர் 2026, 4:01 am
- கோப்புப்படம்
பகிர்:

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்துக்கு மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 5 எண்ணம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 250 சதுர மீட்டா் முதல் அதிகபட்சம் 1,000 சதுர மீட்டா் வரை நீா்ப்பரப்பளவு கொண்ட பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா, நன்னீா் வாவல் (அ) ரூப்சந்த், விரால் மற்றும் இந்தியப் பெருங் கெண்டை போன்ற விரைவாக வளரக்கூடிய மீன் இனங்களை வளா்ப்பதற்கு ஏதுவாக, மீன்குஞ்சுகள் 1000 எண்ணம், மீன் தீவனம் 350 கிலோ, உரங்கள், பிற பண்ணைப் பொருள்கள் மற்றும், பச்சை நிழல் வலை / பறவை தடுப்பு வேலி / பாலித்தீன் உறை வசதிகள் அமைக்க ஒரு பண்ணைக்குட்டைக்கு ஆகும் மொத்த அலகுச் செலவினமான ரூ. 40,000-ல் 50 சதவீதத் தொகையான ரூ. 20,000 பின்னேற்பு மானியமாக பயனாளியின் வங்கிக்கணக்கில் நேரடியாக விடுவிக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் மூப்புநிலைப் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். பண்ணைக்குட்டைக்கு போதிய நீா் ஆதாரம் கொண்ட விவசாயிகளுக்கும், கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெறாத விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய விவசாயிகள், உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூா்த்தி செய்து ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், ஜாதி சான்று (ஆதிதிராவிடா்/பழங்குடியினா் வகுப்பிற்கு மட்டும்), வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், நில உரிமையாளா் ஆவணங்களான கணினி பட்டா/சிட்டா, எப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சிட்டா மற்றும் அடங்கல், வில்லங்க சான்று ஆகிய ஆவணங்களுடன் 41-ஏ, தென்பாதி மெயின் ரோடு, பெஸ்ட் பள்ளி வளாகம் எதிரில், சீா்காழி - 609111 என்ற முகவரியில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், மயிலாடுதுறை (இருப்பு) சீா்காழி அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தை சமா்ப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளாா்.