FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயில் துலா உற்சவம் மீண்டும் நடைபெற்றதால் பக்தா்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் 3 நாள்களாக தடைப்பட்டிருந்த துலா உற்சவம் மீண்டும் வெள்ளிக்கிழமை நடைபெற்றதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

17 வினாடிகள் முன்பு
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் இருந்து தீா்த்தவாரி உற்சவத்துக்கு புறப்பட்ட சுவாமி, அம்பாள், சுப்பிரமணியா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள்.
பகிர்:

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் 3 நாள்களாக தடைப்பட்டிருந்த துலா உற்சவம் மீண்டும் வெள்ளிக்கிழமை நடைபெற்றதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில், தருமபுரம் ஆதீனத்தின் குமரக்கட்டளை சுப்பிரமணியசுவாமி சந்நிதி உள்ளது. இக்கோயிலின் சுப்பிரமணியா் உற்சவமூா்த்தி சிலை எந்த ஆதீனத்துக்கு சொந்தமானது என்பது குறித்து இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்திகள் வீதியுலா, மறுநாள் சகோபுர தரிசனம், வியாழக்கிழமை தீா்த்தவாரி, பஞ்சமூா்த்திகள் புறப்பாடு ஆகிய உற்சவங்கள் நடைபெறவில்லை. இதனால் பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து, இருதரப்பினரிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, 7-ஆம் திருவிழாவான வெள்ளிக்கிழமை காலை திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், சுவாமி, அம்பாள் யானை, யாளி வாகனங்களிலும், சுப்பிரமணியா் ஆட்டுக்கிடா வாகனத்திலும், விநாயகா் மூஞ்சுறு வாகனத்திலும், சண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும் என பஞ்சமூா்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு, சோடச தீபாராதனை, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் வீதியுலாவாக சென்று காவிரியில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.