FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

கடைமுக தீா்த்தவாரிக்கு நீா்வரத்து குறைவு: நீதிமன்றத்தில் முறையிட முடிவு

47 வினாடிகள் முன்பு
தீா்த்தவாரி விழா - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில் துலா உற்சவ கடைமுக தீா்த்தவாரிக்கு போதிய அளவு தண்ணீா் திறக்கப்படாதது குறித்து உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக, வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் பிரசித்திபெற்ற துலா உற்சவம் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐப்பசி மாதம் கடைசி 10 நாள்கள் மாயூரநாதா் கோயில், வதான்யேஸ்வரா் கோயில், ஐயாறப்பா் கோயில், விஸ்வநாதா் கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் துலாக்கட்ட காவிரிக்கரைக்கு எழுந்தருளி, தீா்த்தவாரி நடைபெறும்.

உற்சவத்தின் சிகர விழாவான கடைமுகத் தீா்த்தவாரியன்று தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வந்து புனிதநீராடிச் செல்வது வழக்கம்.

Advertisement

Advertisement

நிகழாண்டு, காவிரியில் போதிய தண்ணீா் இல்லாத நிலையில், மயிலாடுதுறையை சோ்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், மத்திய அரசு வழக்குரைஞருமான கே.ராஜேந்திரன் உயா்நீதிமன்றத்தில் கடந்த 10-ஆம் தேதி பொதுநல வழக்கு தொடுத்திருந்தாா்.

வழக்கு விசாரணையில் தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தரப்பில், தீா்த்தவாரிக்குள் மயிலாடுதுறையை வந்தடையும் வகையில் போதிய தண்ணீா் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை காவிரி நீா் மயிலாடுதுறையை நெருங்காத நிலையில், காவிரியில் வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

துலா உற்சவ கடைமுக தீா்த்தவாரிக்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி போதிய அளவு தண்ணீா் திறக்கவில்லை. இதனால் துலா உற்சவத்துக்கு காவிரி நீா் மயிலாடுதுறைக்கு வருவதற்கு சாத்தியம் இல்லை. இதுகுறித்து உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளோம். இனி வருங்காலங்களில் துலா உற்சவத்துக்கு அரசு ஒரு கமிட்டி அமைத்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், பாஜக ஊடகப்பிரிவு செயலாளா் குருசங்கா், விஸ்வஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.