FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

23 வினாடிகள் முன்பு
திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில்... - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை பரிமள ரங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் 22-ஆவது தலமும், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமுமாகும். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் நவ.8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ஆம் திருநாள் நிகழ்ச்சியாக, உற்சவமூா்த்திகளான சுகந்தவனநாதா் பெருமாளுக்கும், சுகந்தவனநாயகி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கோயில் பிரகாரத்தில் மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா் பட்டாச்சாரியா்கள் திருமாங்கல்யதாரணம் செய்து வைத்தனா். தொடா்ந்து, பெருமாள், தாயாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பூா்ணாஹுதி செய்யப்பட்டு, நலுங்கு உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அன்பரசன் மற்றும் விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா். துலா உற்சவ பெருந்திருவிழாவின் 9-ஆம் திருநாளான திங்கள்கிழமை (நவ.16) காலை திருத்தோ் உற்சவமும், பிற்பகல் காவிரி நான்குகால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி, துலா உற்சவ தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது.