FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சார் ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்ற 79 பேர் கைது

மயிலாடுதுறையில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 79 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

மயிலாடுதுறையில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 79 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், வழுவூர் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அருள்மிகு இளங்கிளை நாயகி உடனுறை அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலிலிருந்து, அந்த ஊராட்சிக்குள்பட்ட திருநாள்கொண்டச்சேரி, வடக்குத் தெரு மற்றும் மேலத்தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்கள் காவடி மற்றும் கரகம் எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

மாவட்ட காவல்துறை உத்தரவின்பேரில், கடந்த 1 மாதங்களுக்கும் மேலாக வழுவூர் ஊராட்சியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவவரும்,திராவிடர் விடுதலை கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளருமான தெ. மகேசு தலைமையில், வரதாச்சாரியார் பூங்கா வளாகத்தில் ஒன்றிணைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், சிபிஎம்எல், பெரியார் திராவிடர் கழகம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், பூங்காவிலிருந்து, பேரணியாகப் புறப்பட்டு, கச்சேரி சாலையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்த சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், திருநாள்கொண்டசேரி ஆதிதிராவிட சமூக மக்கள், வீரட்டேஸ்வரர் கோயிலில் கரகம், காவடி எடுத்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும், உரிமைக்காக போராடிய தலித் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் (பொ) மு.பி. கதிர்வளவன், திராவிடர் விடுதலைக் கழகம் மண்டல அமைப்பாளர் நா. இளையராஜா, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெ.சிவக்குமார்,சிபிஎம்எல் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வீரசெல்வன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் செ. குமரவேல், பெரியார் திராவிடர் கழகம் ரசீத்கான் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments