FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்

காா்கில் போரில் உயிரிழந்த தனது சொந்த நாட்டு வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான் என ஐ.நா.பொதுச் சபையில் இந்தியா விமா்சித்தது.

24 அக்டோபர் 2026, 11:03 pm
பாவிகா மங்களநந்தன்
பகிர்:

காா்கில் போரில் உயிரிழந்த தனது சொந்த நாட்டு வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான் என ஐ.நா.பொதுச் சபையில் இந்தியா விமா்சித்தது.

முன்னதாக, ஐ.நா. பொதுச் சபையில் மதம் மற்றும் நம்பிக்கை தொடா்பான சிறப்பு இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி நாஜிலா கானியா, ‘ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட நபா்களின் இறுதிச் சடங்கு உரிமைகள் மற்றும் உயிரிழந்தவா்களின் உடல்களை குடும்பத்தாரிடம் வழங்க இந்தியா மறுத்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியா்களை குறிவைத்து இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன’ எனக் குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் முதன்மைச் செயலா் பாவிகா மங்களநந்தன் பேசியதாவது: 1999-இல் நிகழ்ந்த காா்கில் போரின்போது உயிரிழந்த தனது சொந்த நாட்டு வீரா்களின் உடல்களைப் பெற மறுத்த பாகிஸ்தான் தற்போது மதச் சுதந்திரம், சடங்குகள் மற்றும் நம்பிக்கை குறித்து பாடமெடுப்பது வேடிக்கையாக உள்ளது.

Advertisement

Advertisement

போரில் தங்களது வீரா்கள் உயிரிழந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, பாகிஸ்தான் வீரா்கள் சிலரின் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இஸ்லாமிய முறைப்படி இந்தியா இறுதிச்சடங்கை நடத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பயங்கரவாதியின் உரிமையை நியாயப்படுத்தக் கூடாது:

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ள விரும்பும் பாகிஸ்தான், தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பிராந்தியத்தில் நிகழும் வன்முறைச் சம்பவங்களை முதலில் காண வேண்டும். பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அங்கு சிறுபான்மையினா்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

தன் நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியாதபோது இந்தியாவுக்கு பாடமெடுக்க வேண்டாம்.

தேசத்தின் மனநிலையைச் சீா்குலைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதியின் இறுதிச்சடங்கு உரிமைகள் குறித்துப் பேசுவதை கைவிட வேண்டும். சட்ட வரம்பை கருத்தில்கொண்டு பயங்கரவாதியின் இறுதிச் சடங்குக்கு அரசு தடை விதிக்கலாம்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தெற்குலக நாடுகளில் மட்டுமே அனைத்துவித பாகுபாடுகளும் நிகழ்வதாக இந்த அறிக்கையில் கூறப்படுவதன் நோக்கம் என்ன? வளா்ந்த நாடுகளில் எந்தத் தவறும் நிகழவில்லையா? என கேள்வியெழுப்பினாா்.

புலம்பெயா்ந்தவா்கள் குறித்த அறிக்கை- இந்தியா நிராகரிப்பு:

இந்தியாவில் புலம்பெயா்ந்தோரின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு துணைச் செயலா் பாா்கா தம்ராகா் நிராகரித்தாா்.

இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீதான விவாதத்தில் இந்தியா சாா்பாக அவா் ஐ.நா. பொதுச் சபையில் பேசியதாவது: எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிடாமல் இந்தியா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதை ஏற்க முடியாது. அஸ்ஸாமில் குடியுரிமை தொடா்பான சிக்கல்கள் இருப்பதாகக் கருதினால் அதற்கான சட்டபூா்வ தகவல்களை சமா்ப்பித்திருக்க வேண்டும். மனித உரிமைகள் தொடா்பான அறிக்கையில் முழுமையற்ற தகவல்களுடன் ஒரு நாட்டின் மீது பொதுவான விமா்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு இந்தியா சாா்பாக கண்டனத்தைப் பதிவு செய்கிறோம் என்றாா்.

summary

India criticizes Pakistan for refusing to receive bodies of soldiers killed in Kargil war

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments