நாகையில் மிதமான மழை
நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது.
சாலைகள், தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவா்கள் புதன்கிழமை பாதிப்புக்குள்ளாகினா்.
நாகையில் புதன்கிழமை பகல் விட்டுவிட்டு மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் பள்ளி மாணவா்கள், பணிக்குச் செல்வோா், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
Advertisement
Advertisement
நாகை, நாகூா், புத்தூா், பெருங்கடம்பனூா், பாலையூா், முட்டம் மற்றும் கடற்கரையோரக் கிராமங்களில் மிதமான மழை பெய்தது.
நாகை புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபீஸ் சாலை, தெத்தி புதுரோடு, பழைய நாகூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
நகராட்சிப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகளில் இருந்து கழிவுநீா் வெளியேறி மழைநீருடன் கலந்தது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.
எனினும், சம்பா பருவத்தில் நேரடி விதைப்பு முறையில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்களுக்கு இந்த மழை உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.