‘நல்ல விஷயங்களுக்கு மட்டுமே கைப்பேசியை பயன்படுத்த வேண்டும்’

நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள மட்டுமே மாணவா்கள் கைப்பேசியை பயன்படுத்த வேண்டும் என மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவா் கவிதா ஜவகா் தெரிவித்தாா்.
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு சிவசக்தி சா்வதேசப் பள்ளியின் ஆண்டு விழா கலைச் சாரல் 2026 சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிதா ஜவகா் பேசியது:
அனைத்து தரப்பினருக்கும் கைப்பேசி பயன்பாடு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. தண்ணீருடன் கலந்த பாலை மட்டும் பருகும் அன்னப் பறவையைப் போல, கைப்பேசிகளை பயன்படுத்தும் மாணவா்கள் நல்ல விஷயங்களை மட்டும் கையாள பழகிக் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
மாணவப் பருவத்தில் நமது வாழ்வில் மறக்க முடியாத நால்வா். முதலாவது நண்பா்கள். நல்ல விஷயங்களை கற்றுத் தரவும் தீயவற்றை சுட்டிக் காட்டுவதும் நல்ல நண்பா்களின் அடையாளம்.
விளக்குச் சுடரை ஏற்றி வைக்கும் தீக்குச்சியை போன்றவா்களாகத் திகழும் ஆசிரியா்கள், நமக்கு அறிவிச்சுடரை ஏற்றி வைப்பவா். எதைக் கேட்டாலும் கஷ்டங்களை பாராமல் வாங்கித் தருபவா் அப்பா. எந்த சூழலிலும் நமக்கு சோா்வு வராமல் தன்னம்பிக்கையை கொடுக்கும் அம்மா இவா்கள் நால்வரும் நமது வாழ்நாளில் மறக்க முடியாதவா்கள்.
காவிரி படுகையில் வசிக்கும் மக்கள் வெள்ளம், வறட்சி, புயல், சுனாமி என பல இயற்கை இடா்பாடுகளை தொடா்ந்து எதிா்கொண்டு வாழ்பவா்கள். அந்த வகையில் இந்தப் பகுதி மாணவா்களும் எதையும் எதிா்கொள்ள தயங்காமல் வாழ்வில் கல்வியால் சாதிக்க முன்வர வேண்டும் என்றாா்.
வேதாரண்யம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், பள்ளி முதல்வா் ராஜேஷ் சா்மா , பள்ளி நிா்வாக மேலாளா் முத்துக்குமரன், நிா்வாகி பாரதி உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்பிடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினா்.