FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புத்த சமயத்தின் செல்வாக்கை திராவிட இலக்கியங்களில் அறியலாம்: சிற்பி பாலசுப்ரமணியன்

புத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்ததை திராவிட இலக்கியங்களின் மூலம் அறியலாம் என சாகித்ய

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

புத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்ததை திராவிட இலக்கியங்களின் மூலம் அறியலாம் என சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும், சாகித்ய அகாதெமியும் இணைந்து "திராவிட இலக்கியங்களில் புத்த சமயச் செல்வாக்கு' என்ற பொருண்மையில் செவ்வாய்க்கிழமை நடத்திய ஒருநாள் உரையரங்கில் பங்கேற்று அவர் பேசியது: புத்தர் ஞானம் பெற்ற காலத்திலிருந்து புத்த சமயமானது பரவத் தொடங்கியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் புத்த சமயக் கருத்துகள் பரவத் தொடங்கின. 
காஞ்சிபுரம் அருகே ஏராளமான பெளத்த துறவிகள் இருந்துள்ளனர். அங்கிருந்து போதி தர்மர் என்பவர் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று, தியான பெளத்தம் என்பதை போதித்தார். இதுவே ஜென் புத்திசம் எனப்படுகிறது. போதி தர்மரின் கருத்துகள் சீனா, ஜப்பான் கோயில்களில் உள்ளன. மேலும் உலகப் புகழ்பெற்ற பெளத்த பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகத்தில் கிங்நாகர், தர்மபாலர் எனும் தமிழர்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். 
திருக்குறளிலும் புத்தரின் கருத்துகள் உள்ளன. திருவள்ளுவர் கடவுளை அறவாழி என்கிறார். அறவாழி என்பது புத்தரின் தர்மச் சக்கரத்தைக் குறிக்கும். 
தொடக்க காலக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் புத்த சமய செல்வாக்கு வெளிப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் ராஜராஜசோழன், சூடாமணி விகாரம் எனும் கோயிலை கட்டியுள்ளார். பின்னர், அந்த கோயிலுக்கு ஆனைமங்கலம் முதலான சிற்றூர்களை பரிசாக தந்துள்ளார். ஆக திராவிட இலக்கியங்களிலும், உலக இலக்கியங்களிலும் புத்த செல்வாக்கு எதிரொலிக்கின்றன என்றார்.
முன்னதாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.புவனேஸ்வரி குத்துவிளக்கேற்றி உரையரங்கை  தொடங்கி வைத்தார்.  
இதில் தமிழ்த் துறைத் தலைவர் ப.வேல்முருகன், நிதி அலுவலர் பழனி, சாகித்ய அகாதெமியின் தென்மண்டலச் செயலர் எஸ்.பி. மகாலிங்கேஸ்வர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியர் க.ஜவஹர் உள்ளிட்டோர் பேசினர்.
அமர்வுகள்....
முதல் அமர்வு சாகித்ய அகாதெமியின் கன்னடப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்கையா தலைமையிலும், இரண்டாம் அமர்வு பேராசிரியர் சோ.ந.கந்தசாமி தலைமையிலும் நடைபெற்றது. இதில் புத்த சமய செல்வாக்கு என்பது தென் திராவிட மொழி இலக்கியங்களில் எதிரொலிக்கின்றன என்பது குறித்த கட்டுரைகள் வழங்கப்பட்டன. 
பல்கலைக்கழகக் கல்விப் புல முதன்மையர் த. செங்கதிர் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் பேசினார். இதில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ப. குமார் மற்றும் தமிழ்த் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் 
பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments