FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மன்னார்குடியில் 8 இடங்களில் சாலை மறியல்: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, கோட்டூர் பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, கோட்டூர் பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகளும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பார்வையிடாததைக் கண்டித்து, 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா கலந்துகொண்டார்.
முக்குளம் சாத்தனூர் ஊராட்சிக்குள்பட்ட தளிக்கோட்டை காலனி, கருவாக்குறிச்சி காலனி, தர்காசு ஆகிய பகுதிகளில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும், குடிசை வீடுகளும் சேதமடைந்தன. புயல் தாக்கி 3 நாள்கள் ஆகியும், அரசு அலுவலர்களும், பேரிடர் மீட்புக்குழுவினரும் இங்கு வந்து பார்வையிடவில்லையாம். அத்துடன், முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்காமல் இருப்பதுடன், குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காணவில்லையாம்.
இதைக் கண்டித்து, மன்னார்குடி காளவாய்க்கரையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, திமுக நகர செயலாளர் வீரா. கணேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், மன்னார்குடி வட்ட வழங்கல் அலுவலர் மீனா மகேஸ்வரி ஆகியோர், எம்எல்ஏ மற்றும் கிராம நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதேபோல், பரவாக்கோட்டையில், மதுக்கூர் பிரதான சாலை, அண்ணாசிலை அருகே 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
உள்ளிக்கோட்டையை அடுத்த சம்மட்டிக்குடி காட்டில், வடசேரி பிரதான சாலையில் கிராம மக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர். பரவாக்கோட்டை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததின்பேரில், மறியல் முடிவுக்கு வந்தது.
இதேபோல், வடபாதி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், முத்துப்பேட்டை சாலை வடபாதி கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் தலையாமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்பட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
இதுதவிர, கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோட்டூர், விக்கிரபாண்டியம், கோட்டூர் தோட்டம், திருப்பத்தூர் ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கே. பத்மாவதி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தையடுத்து, மறியல் போராட்டங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டன. மன்னார்குடியைச் சுற்றி ஒரே நாளில் 8 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றதால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments