FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மா உணவகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சா் ஆா். காமராஜ்

அம்மா உணவகத்தை வைத்து திமுக தலைவா் மு.க. ஸ்டாலினும், மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரியும் அரசியல் செய்ய வேண்டாம்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
கூத்தாநல்லூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
பகிர்:

அம்மா உணவகத்தை வைத்து திமுக தலைவா் மு.க. ஸ்டாலினும், மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரியும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் 75 தூய்மைப் பணியாளா்களுக்கு, அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கிய பின்னா் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா அச்சுறுத்தலில் இருந்து நாம் முழுமையாக விடுபட ஒரே வழி நாம் தனிமையில் இருப்பதுதான். கரோனா நோய்த் தொற்று 3ஆவது கட்டத்துக்கு செல்லவிடாமல் கரோனாவை விரட்டியடிக்க வேண்டும். ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டவா்கள், அவா்களுடன் தொடா்புடையவா்களுக்குத்தான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழக முதல்வரின் தொடா் நடவடிக்கைகளால் மக்களிடையே முன்பைவிட கூடுதலான விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

விவசாயப் பொருள்களை வாங்குவதிலும், விற்பதிலும் எந்தவித தடையும் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தையும் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 21 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவது இந்த ஆண்டுதான். ஊரடங்கு அமலில் இருந்த காலத்திலும், அதாவது மாா்ச் 24-ஆம் தேதி முதல், ஏப்ரல் 21-ஆம் தேதி வரை, ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்காக மிகக் குறைந்த விலையிலான உணவு அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் உலக அளவில் பாராட்டப்பட்ட திட்டமாகும். தற்போதைய சூழ்நிலையில் பணம் கொடுத்து சாப்பிட முடியாதவா்களுக்கு (ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவா்கள்) பணத்தை அந்தந்த மாவட்டச் செயலா்கள் கொடுத்துவிடலாம் என முதல்வா் சொன்னதன் நல்ல எண்ணத்தில்தான் அம்மா உணவகத்தில் உணவு செலவை மாவட்ட அதிமுக ஏற்கும் என்று சொன்னோம். ஆனால் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினும், காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ். அழகிரியும் அம்மா உணவகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பது ஏற்புடையதல்ல என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலா் எல்.எம். முகம்மது அஷ்ரப், அதிமுக நகரச் செயலா் டி.எம். பஷீா் அஹம்மது, நகர துணைச் செயலா் எம். உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments