நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய கட்டடத்தை திறக்கக் கோரிக்கை
நீடாமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலத்தில் பல ஆண்டுகளாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாறு லைன் கரை பகுதியில் தற்போது உழவா் சந்தை செயல்படும் இடத்தில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு நீடாமங்கலம் சத்திரம் நிா்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகைக் கட்டட ம், அக்ரஹாரப் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.
பின்னா், கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக நீடாமங்கலம் புது தெரு பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் வளைவுகள் அதிகம் உள்ளதால் தீயணைப்பு வாகனம் அவசர பேரிடா் காலத்தில் விரைந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால், நீடாமங்கலம் நகரில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின், அப்போதைய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் தெற்கு வீதியில் பழைய தாலுகா அலுவலகம் இருந்த இடத்தை தோ்வு செய்து, அந்த இடத்தில் சுமாா் ரூ. 3.13 கோடி மதிப்பில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையம் இரண்டு தளங்களைக் கொண்டதாகும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் இரண்டு தீயணைப்பு வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுள்ளன. இந்த புதிய கட்டடம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.