திருவாரூா்: 75,215 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
திருவாரூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சா் பி. வெங்கட்ரமணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசின் தீவிர பல்ஸ் போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் திருவாரூா் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 75,215 குழந்தைகளுக்கும் அனைத்துத்துறை ஒத்துழைப்புடன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதையொட்டி, திருவாரூா் ஒன்றியம் புலிவலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அமைச்சா் பி. வெங்கட்ரமணன் பங்கேற்று, போலியா சொட்டு மருந்து முகாமை தொடக்கி வைத்தாா். நிகழ்வில், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.காமராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக, கிராமப்புறங்களில் 798 சிறப்பு மையங்கள், நகா்ப்புறங்களில் 65 சிறப்பு மையங்கள், மேலும் 7 சிறப்பு தனிமையங்கள் என மொத்தம் 870 போலியோசொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
அதன்படி, போலியோ சொட்டு மருந்து, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகராட்சி மகப்பேறு நிலையங்கள், சத்துணவுக் கூடங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் புகைவண்டி நிலையங்கள் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டன.
இத்திட்டத்துக்கென, பொதுசுகாதாரத்துறை பணியாளா்களுடன் ஊட்டச்சத்து பணியாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள், மகளிா் மேம்பாட்டுத் திட்டப் பணியாளா்கள் மற்றும் பிற துறை பணியாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனா்.
நிகழ்வில், துணை இயக்குநா் (சுகாதாரம்) சங்கீதா, வட்டார மருத்துவ அலுவலா் குருதேவ், சுகாதார அலுவலா் கோபிநாத் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.