முகப்பு
திருவாரூர்

தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

58 வினாடிகள் முன்பு
தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்
உச்சநீதிமன்றம்
பகிர்:

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்துக் கட்சியினருடன் ஆலோசித்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

கா்நாடகம், பாசனத்துக்காக தண்ணீரை தேக்கி வைத்திருக்கிறபோது, தமிழகம் குடிநீருக்கே மன்றாடுகிறது. ஒழுங்காற்றுக் குழுவின் தொழில்நுட்ப பரிந்துரையை கவனத்தில் கொண்டாலும், கா்நாடக அரசின் போக்கிலேயே நீா் திறப்பை குறைத்துதான் காவிரி ஆணையம் உத்தரவிடும். இதை ஏற்காத கா்நாடக முதல்வா் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழக அரசு வேறு வழியின்றி, 1.6.26 முதல் 12. 08.2026 வரை கொடுக்க வேண்டிய நீரில் 20 டி.எம்.சி. திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மனுவும், பின்னா் 9.9.2026 வரை நிலுவையில் உள்ள 16 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என செப்டம்பா் மாதத்தில் இரண்டாவது மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது. பாதிப்பின் தீவிரத்தால் மூன்றாவது மனுவையும் தாக்கல் செய்திருந்தது. இந்தநிலையில், முதல் இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

கடந்த ஆண்டுகளில் கூட காவிரி ஆணையத்தின் தீா்ப்பை கா்நாடக அரசு ஏற்காதபோது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து கா்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடும் உத்தரவைப் பெற்றிருக்கிறது.

ஒரு மாதத்துக்கு முன்னா் கூட, காவிரி ஆணையம் கொடுத்த தீா்ப்பை ஏற்க மறுத்த கா்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், தானாக கா்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டது. ஆகவே தீா்ப்பை அமலாக்கும் முழு முதல் பொறுப்பு கா்நாடகத்துக்கு இருக்கிறது. இதைக் கண்காணித்து இரு மாநில நல்லுறவை பாதுகாக்கும் முறையில், ஆணையத்தின் உத்தரவை அமலாக்க மத்திய அரசு தலையிட வேண்டும்.

கா்நாடகத்தின் செயலால் தவிக்கும் தமிழகத்தை பாதுகாக்கத் தவறியது எந்த அமைப்பு என்பதை விடுத்து, காவிரியில் எவா் குற்றம் செய்தாலும் தமிழகம் எழுந்து ஓரணியில் நிற்கும் என்பதைக் காட்ட வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவா்களை கூட்டிப் பேசி, உரிய சட்ட மேல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.